Wednesday, 8 May 2013

ராமதாஸ் கைது: விரக்தியில் சேலம் பாமக செயலாளர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை!

08 / 05 / 2013

சேலம்: ராமதாஸ், அன்புமணி கைது செய்யப்பட்ட விரக்தியில் சேலத்தை சேர்ந்த பா.ம.க. வட்ட செயலாளர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ் (36). இவர் வெள்ளிப்பட்டறையில் வேலைப் பார்த்து வந்தார். 50வது வட்டம் பா.ம.க கட்சியின் செயலாளராக இருக்கிறார். இவர் சயனைடு சாப்பிட்டதாக இன்று காலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுத்தும் பயனளிக்காமல் இறந்து விட்டார். இந்த இறப்பை பா.ம.க.வினர், ‘‘கட்சித் தலைவர் ராமதாஸ் ஐய்யாவையும், சின்னய்யா அன்புமணியும் கைது செய்தது கண்டித்து தான் இறந்துள்ளார்.

இவர் கட்சிக்கு தீவிர உழைப்பாளி. ஐயாவும், சின்னய்யாவும் கைது செய்ததில்  இருந்து சோறு, தண்ணீர் குடிக்காமல் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.  பார்ப்பவர்கள் எல்லோரிடமும் ஐயாவையும், சின்னய்யாவையும் எப்போது விடுதலை செய்வார்கள். என்று கேட்ட வண்ணமே இருந்தார்.

ஐய்யாவையும், சின்னய்யாவையும் கைது செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இன்று காலை வெள்ளிப் பட்டறைக்கு வேலைக்கு போனவர் அங்கிருந்த சயனைடை எடுத்து வீட்டில் வந்து குடித்து இறந்து விட்டார்’’ என்கிறார்கள்.

காவல்துறையினர், ‘‘மாரடைப்பால் இறந்து விட்டார்’’ என்கிறார்கள். இவரின் சாவுக்கு என்ன காரணம் என்று புரியாத புதிராக இருக்கிறது. 
 
ஆனால் அக்கம் பக்கத்தினர், ‘‘இவர் மனவருத்தத்தில் தான் தற்கொலை செய்துக் கொண்டார்’’ என்கிறார்கள்.

ஏற்கனவே ராமதாஸ் கைது செய்ததில் இருந்து சேலம் மாவட்டம் பரபரப்பாக இருந்த சூழ்நிலையில் இந்த தற்கொலை சம்பவம் இன்னும் கூடுதலாக பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment