Friday 3 May 2013

வன்னியர் புராணம்



வன்னிய புராணம்

வன்னிய புராணம் என்பது ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மகாராசாவின் தோற்றத்தைப் பற்றி கூறும் நூல். இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238 இது எழுதப்பட்டது வடமொழியில் எழுதப்பட்ட நூலான “அக்னி” அல்லது “அக்னேய புராணத்தில்“ இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. அக்னி புராணம் இந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணத்தில் வரும் செய்திகள் சீர்காழியின் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. வீர உருத்ர வன்னிய மகாராஜா, சம்பு முனிவர் நடத்திய வேள்வியில் பிறந்ததைப் பற்றி கூறுவதால் இந்நூல் சம்பு மைந்தர் காப்பியம் என்றும் வன்னியர் புராணம் என்றும் அழைக்க பெற்றது. வன்னி என்றால் அக்னி எனப் பொருள்படும். இந்த உருத்ர வன்னியரின் வழி வந்தவர்கள் வன்னியர் என்றழைக்கப்படுகின்றனர்.


தூர்வாச முனிவருக்கும் கஜமுகிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வில்வலன்" மற்றும் "வாதாபி". இவர்களின் தாயாரான கஜமுகி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள்.
வில்வலனும் வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தனர். இதனால் கோபம் அடைந்த அகத்தியர் வில்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவனை நோக்கி தவம் இருந்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம், தெற்கு கடற்கரையின் மையப் பகுதியில் அமைந்திருந்த ரத்னபுரியை அரசாள ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்க கன்னியை மனந்தான். வாதபி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியர் துணை இருந்தார். பின்னர் வாதாபி தேவர்களை மிகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதை கண்ட நாரதர், சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களைக் கூறினார். அதே சமயம் தேவர்களை காக்க சம்பு முனிவர், சிவபெருமானை நோக்கி வேள்வி ஒன்றை நடத்தினார். அப்பொழுது சம்பு முனிக்கு சிவபெருமான் அருள் பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு நெருப்புத்(வன்னி) துளியை அந்த வேள்வியில் விழச் செய்தார். விழுந்த அந்த நெருப்பிலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் ஒரு வீரன் வந்தான். அவன் “ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மஹாராஜா” என்றழைக்கப்பட்டான்.
சிவபெருமானும், தாய் பார்வதியும் தேவேந்திரனின் இரண்டாம் மகளான மந்திர மாலையை திருமணம் செய்து வைத்தார்கள். மந்திர மாலை என்பவள் முருகப்பெருமானின் மனைவியான தெய்வயானியின் தங்கையாவாள். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தார்கள். அவர்களின் பெயர் “கிருஷ்ண வன்னியர், பிரம்ம வன்னியர், அக்னி வன்னியர், சம்பு வன்னியர்“ என்பனவாகும். இவர்களுக்கு காந்தா(சுஷீலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்தார்கள். அவர்களின் பெயர் “இந்திராணி , நாரணி ,சுந்தரி ,சுமங்கலி ” என்பனவாகும்.

அசுரனுடன் போர்

சிவபெருமானின் அறிவுரைப்படி அசுரன் வாதாபியை வதம் செய்ய உருத்ர வன்னியர், சிவபெருமான் அளித்த தம் படையுடன் தெற்கு நோக்கி சென்றார். அங்கே உள்ள துர்க்கையின் கோவிலுக்கு சென்று, போரில் தமக்கு துணையாக இருக்குமாறு வணங்கினார். அதற்கு ஆசி தரும் விதமாக, துர்க்கையின் பூதப் படையும் வன்னியருடன் வந்தது. அந்தப் படையையும் அழைத்துகொண்டு ருத்ர வன்னியர் கடற்கரையை நெருங்கும் போது, கடல் தானாக வழி விட்டது. அப்பொழுது அவர்களுடன் சென்ற ஒரு நாயால், அந்த கடற்கரையை தாண்ட இயலவில்லை. அதனால் அந்த நாய் மீண்டும் வன்னியரின் அரண்மனைக்கே திரும்பியது .
உருத்ர வன்னியரும் அவரது படையும் ரத்னா புரியை அடைந்த உடன், அசுரன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர எண்ணினார் வன்னியர். நாரதரை அசுரன் வாதாபியுடன் சமாதானம் பேச அனுப்பினார். ஆனால் அது தோல்வியிலே முடிந்தது. அதன் விளைவு, வன்னியர் படைக்கும் அசர படைக்கும் மிகப்பெரிய போர் உருவாயிற்று. அசுரர்களின் குலதெய்வமான காளி அம்மன், அசுரர்களுக்கு துணையாக இருந்ததால் மிக உக்கிரமாக நடந்த அந்தப் போரின் முடிவில், ருத்ர வன்னியரின் கையால் அசுரன் வாதாபி கொல்லப்பட்டான். பெண்கள் உட்பட அனைத்து அசுரர்களும், வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர் . இருப்பினும் சுக்ராசாரியாரின் யோசனைப்படி, நான்கு அசுரப் பெண்கள் மட்டும் மனித வடிவில் இருந்தனர். இவர்களை கண்ட வன்னியர்கள், இந்த பெண்கள் மனித குலத்தவர்கள் என்று நினைத்து வன்னியர்கள், அவர்களை வதம் செய்யாமல் தங்களோடு தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
போர் முழுமையாக முடிந்தவுடன், துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர வன்னியரும் அவரது படையும் தமது இருப்பிடத்திற்கு வந்தனர். தம் இருப்பிடத்திற்கு வந்த உருத்ர வன்னியர் அதிர்ச்சிக்கு உள்ளானார். கடலைத் தாண்ட முடியாமல் வீட்டிற்கு வந்த நாயைக் கண்ட உருத்ர வன்னியரின் மருமகள்கள், போரில் வன்னியர் படை வீழ்ந்தது என நினைத்து தங்கள் கணவர்மார்களும் மடிந்திருப்பர் என்று நினைத்தும் தீயை மூட்டி அதில் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். பிறகு உருத்ர வன்னியரின் நான்கு மகன்களும், தாங்கள் அழைத்து வந்த மனித உருவில் இருந்த அந்த நான்கு அசுர பெண்களையும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டு, அவர்களோடு வாழ ஆரம்பித்தனர்.

வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி

சிவபெருமானும், நாராயணனும் உருத்ர வன்னியரிடம் “சம்பு பகுதியை” ஆட்சி செய்யுமாறு கூறினர். அதுபோல வடக்கே “பாலாறு” வரை பிரம்ம வன்னியரிடமும், ”பெண்ணையாறு” வரை கிருஷ்ண வன்னியரிடமும், அங்கிருந்து வடக்கே “காவேரி” வரை சம்பு வன்னியரிடமும், தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினர். அதன் பிறகு, உருத்ர வன்னியர் மற்றொரு மகனை பெற்றார். அவர் பெயர் “சந்திர சேகர மகாராஜன்”. உருத்ர வன்னியர் தம் ஆட்சி பொறுப்பைத் தமது மகன் சந்திர சேகர மகாராஜனிடம் கொடுத்து விட்டு, தேவேந்திரனின் அழைப்பை ஏற்று இந்திரலோகத்திற்குச் சென்றார்.

மக்கள் பண்பாட்டில் வன்னிய புராணம்

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீர வன்னிய ராசன் வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாததையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடிப்பெருக்கு அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை ஒரு சில மாற்றங்களுடன் வன்னியக் கூத்து என்ற பெயரில் கிராமப்புறப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.



பல்லவரும் வன்னியரும்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்குப் பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி). நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இக்கதையே வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்பு வன்னிய புராணம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment